TAMIL

கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். கோழிகள்இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கிறது. சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

வரலாறு

இந்தியா, மியன்மார், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (Gallus gallus) இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. ] சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

வளர்ப்பு முறைகள்

கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.

கட்டற்ற கோழி வளர்ப்பு

இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நமாட மற்றும் தமது இயற்கை வாழ்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்